மு.வரதராசன் விளக்கம்
எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.
பரிமேலழகர் விளக்கம்
'எண்பதத்தான்' ஓரா முறைசெய்யா மன்னவன் - முறை வேண்டினார்க்கு எளிய செவ்வி உடையனாய், அவர் சொல்லியவற்றை நூலோர் பலரோடும் ஆராய்ந்து, நின்ற உண்மைக்கு ஒப்ப முறை செய்யாத அரசன், தண்பதத்தான் தானே கெடும் - தாழ்ந்த பதத்திலே நின்று தானே கெடும். (எண்பதத்தான் என்னும் முற்று வினை எச்சமும் 'ஓரா' என்னும் வினை எச்சமும், செய்யா என்னும் பெயரெச்சமும், எதிர்மறையுள் செய்தல் வினை கொண்டன.தாழ்ந்த பதம்: பாவமும் பழியும் எய்தி நிற்கும் நிலை. 'அல்லவைசெய்தார்க்கு அறம் கூற்றம்' (நான்மணிக்.85) ஆகலின்,பகைவர் இன்றியும் கெடும் என்றார். இதனான் முறை செலுத்தாதானது கேடுகூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பலவகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான்.