குறள் 534:
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.
'To cowards is no fort's defence'; e'en so The self-oblivious men no blessing know
அதிகாரம் - 54 - பொச்சாவாமை
மு.வரதராசன் விளக்கம்
உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்து பயன் இல்லை, அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான அரண் கட்டப்பட்டிருந்தாலும் எந்தப் பயனுமில்லை. அதைப் போலவே என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மறதி உடையவர்களுக்கு அந்த நிலையினால் எந்தப் பயனுமில்லை.
பரிமேலழகர் விளக்கம்
அரண் அச்சம் உடையார்க்கு இல்லை - காடு மலை முதலிய அரண்களுள்ளே நிற்பினும், மனத்தின்கண் அச்சமுடையார்க்கு அவற்றால் பயன் இல்லை, ஆங்கு நன்கு பொச்சாப்பு உடையார்க்கு இல்லை - அதுபோலச் செல்வமெல்லாம் உடையராயினும், மனத்தின்கண் மறவியை உடையார்க்கு அவற்றால் பயன் இல்லை. (நன்மைக்கு ஏதுவாகலின் 'நன்கு' என்றார். அச்சமுடையார் நின்ற அரண் அழியுமாறு போல, மறவி உடையாருடைய செல்வங்களும் அழியும் என்பதாயிற்று.)
சாலமன் பாப்பையா விளக்கம்
மனத்துள் பயம் உள்ளவர்க்கு எத்தகைய பாதுகாப்பாலும் பயன் இல்லை. அதுபோலவே மறதி உடையவர்க்கும் பாதுகாப்பால் பயன் இல்லை.