மு.வரதராசன் விளக்கம்
தன்னிடமிருந்து பிரிந்து சென்று பின் ஒருக் காரணம்பற்றித் திரும்பிவந்தவனை, அரசன் அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ள வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஏதோ காரணம் கற்பித்துப் பிரிந்து போய், மீண்டும் தலைவனிடம் தக்க காரணத்தினால் வந்தவரை, நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
உழைப் பிரிந்து காரணத்தின் வந்தானை - காரணம் இன்றித் தன்னிடத்து நின்றும் பிரிந்துபோய்ப் பின் காரணத்தான் வந்த சுற்றத்தானை, வேந்தன் இழைத்து இருந்து எண்ணிக் கொளல் - அரசன், அக்காரணத்தைச் செய்து வைத்து ஆராய்ந்து தழீஇக் கொள்க. (வாளா உழைப்பிரிந்து என்றமையின், பிரிதற்குக் காரணம் இன்மை பெற்றாம். வருதற் காரணத்தைச் செய்யாதவழிப் பின்னும் பிரிந்து போய்ப் பகையோடு கூடும் ஆகலின், இழைத்திருந்து என்றும், அன்பின்றிப் போய்ப் பின்னும் காரணத்தான் வந்தமையின், எண்ணிக் கொளல் என்றும் கூறினார். பிரிந்து போய சுற்றத்தாருள் தீமை செய்யப்போய் அதனை ஒழிய வருவானும், பின் நன்மைசெய்ய வருவானும் தழுவப்படும் ஆகலின், தழுவுமாறு முறையே இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒரு காரணமும் இல்லாமல், தானே இயக்கத்தை விட்டுப் பிரிந்து போன ஒருவன் ஏதோ ஒரு காரணத்தோடு திரும்ப வந்தாள் என்றால், ஆட்சியாளன் பொறுத்து இருந்து, ஆராய்ந்து அவனைச் சேர்த்துக் கொள்க.