மு.வரதராசன் விளக்கம்
செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்து, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்த வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
செய்வானை நாடி - முதற் கண்ணே செய்வானது இலக்கணத்தை ஆராய்ந்து, வினை நாடி - பின் செய்யப்படும் வினையினது இயல்பை ஆராய்ந்து, காலத்தொடு எய்த உணர்ந்து செயல் - பின் அவனையும் அதனையும் காலத்தோடு படுத்துப் பொருந்த அறிந்து அவனை அதன்கண் ஆடலைச் செய்க. (செய்வானது இலக்கணமும் வினையினது இயல்பும் மேலே கூறப்பட்டன. காலத்தொடு எய்த உணர்தலாவது, இக்காலத்து இவ்விலக்கணமுடையான் செய்யின் இவ்வியல்பிற்றாய வினை முடியும் என்று கூட்டி உணர்தல்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
முதலில் ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதியையும் எண்ணி பிறகு அவனையும் அச்செயலையும் செய்யப்படும் காலத்தோடு பொருத்தி எண்ணிச் செயல் செய்க.