மு.வரதராசன் விளக்கம்
இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்.
பரிமேலழகர் விளக்கம்
மனைத் தக்க மாண்பு உடையளாகித் தன் கொண்டான் வளத்தக்காள் - மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகளை உடையவளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை உடையாள்; வாழ்க்கைத்துணை- அதற்குத்துணை. (நற்குணங்களாவன : துறந்தார்ப் பேணலும், விருந்து அயர்தலும், வறியார்மாட்டு அருளுடைமையும் முதலாயின. நற்செய்கைகளாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், அட்டில் தொழில் வன்மையும், ஒப்புரவு செய்தலும் முதலாயின. வருவாய்க்குத் தக்க வாழ்க்கையாவது: முதலை அறிந்து அதற்கு இயைய அழித்தல். இதனால் இவ்விரண்டு நன்மையும் சிறந்தன என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.