மு.வரதராசன் விளக்கம்
அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும் புகழப்படுவோரைக்கூட ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்து விட இயலாது.
பரிமேலழகர் விளக்கம்
அரிய கற்று ஆசு அற்றார் கண்ணும் - கற்றற்கு அரிய நூல்களைக் கற்று மேற்சொல்லிய குற்றங்கள் அற்றார் மாட்டும், தெரியுங்கால் வெளிறு இன்மை அரிது - நுண்ணியதாக ஆராயுமிடத்து வெண்மை இல்லாமை அரிது. (வெண்மை: அறியாமை, அஃது அவர்மாட்டு உளதாவது, மனத்தது நிலையாமையான் ஒரோவழியாகலின், 'தெரியுங்கால்' என்றார். காட்சியளவையால் தெரிந்தால் அதுவும் இல்லாதாரே தெளியப்படுவர் என்பது குறிப்பெச்சம். இவ்வளவைகளான் இக்குணமும் குற்றம் தெரிந்து குணமுடையாரைத் தெளிக என்பது, இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது.