மு.வரதராசன் விளக்கம்
அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல.
பரிமேலழகர் விளக்கம்
சிறை நலனும் சீரும் இலர் எனினும் - அரண் அழித்தற்கு அருமையும் பெருமையுமாகிய ஆற்றல் உடையர் அல்லராயினும், மாந்தர் உறை நிலத்தொடு ஒட்டல் அரிது - வினைக்கு உரிய மாந்தரை அவர் உறைகின்ற நிலத்தின்கண் சென்று தாக்குதல் அரிது. ('நிலத்தொடு' என்பது வேற்றுமை மயக்கம். ஆண்மை உடையாரைச் சிறுமைநோக்கி இருப்பின்கண்சென்று தாக்கின், அவர் அது விட்டுப்போதல் துணிவினரன்றிச் சாதல் துணிவினராவர். ஆகவே, அவர்க்குப் பெரும்படை உடையும் என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
மனிதர்கள் வலிமையான கோட்டையும், மிகுந்த பலமும் இல்லாதவர்தாம் என்றாலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தாக்குவது கடினம்.