மு.வரதராசன் விளக்கம்
அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்.
பரிமேலழகர் விளக்கம்
அறன் எனப்பட்டது இல்வாழ்க்கை - இருவகை அறத்தினும் நூல்களான் அறன் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே; அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று - ஏனைத் துறவறமோ எனின், அதுவும் பிறனால் பழிக்கப்படுவது இல்லையாயின், அவ்வாழ்க்கையோடு ஒரு தன்மைத்தாக நன்று. (ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. இதனால் பிரிக்கப்பட்டது துறவறம் ஆதலின், 'அஃது' என்னும் சுட்டுப்பெயர் அதன் மேல் நின்றது. 'பிறன் பழிப்பது' என்றது கூடாவொழுக்கத்தை. துறவறம் மனத்தையும் பொறிகளையும் ஒறுத்து அடக்கவல்ல அருமையுடைத்தாய வழியே, அவற்றை ஒறுக்க வேண்டாது ஐம்புல இன்பங்கள் ஆரத்துய்க்கும் மென்மையுடைய இல்வாழ்க்கையோடு அறம் என ஒருங்கு எண்ணப்படுவது என்றவாறு ஆயிற்று. இவை நான்கு பாட்டானும் இல்நிலையே பயனுடைத்து என இதன் சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அறம் என்று சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே; துறவற வாழ்க்கையும், பிறரால் பழிக்கப்படாமல் இருக்குமானால் நல்லது.