குறள் 481:

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

A crow will conquer owl in broad daylight; The king that foes would crush, needs fitting time to fight
அதிகாரம் - 49 - காலமறிதல்
மு.வரதராசன் விளக்கம்
காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கை வென்று விடும். எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
பரிமேலழகர் விளக்கம்
கூகையைக் காக்கை பகல் வெல்லும் - தன்னின் வலிதாய கூகையைக் காக்கை பகற்பொழுதின்கண் வெல்லாநிற்கும், இகல் வெல்லும் வேந்தர்க்குப் பொழுது வேண்டும் - அது போலப் பகைவரது இகலை வெல்லக் கருதும் அரசர்க்கு அதற்கு ஏற்ற காலம் இன்றி அமையாதது. (எடுத்துக்காட்டு உவமை, காலம் அல்லாவழி வலியால் பயன் இல்லை என்பது விளக்கி நின்றது. இனிக் காலம் ஆவது, வெம்மையும் குளிர்ச்சியும் தம்முள் ஒத்து, நோய் செய்யாது, தண்ணீரும் உணவும் முதலிய உடைத்தாய்த் தானை வருந்தாது செல்லும் இயல்பினதாம். இதனால் காலத்தது சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தன்னைவிடப் பலமுள்ள கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடும்; ஆகவே பகைவரை வெல்ல எண்ணுபவர்க்கு அதற்கு ஏற்ற காலம் அவசியம்.