மு.வரதராசன் விளக்கம்
செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
வினை வலியும் - தான் செய்யக்கருதிய வினைவலியையும், தன் வலியும் - அதனைச் செய்து முடிக்கும் தன் வலியையும், மாற்றான் வலியும் - அதனை விலக்கலுறும் மாற்றான் வலியையும், துணைவலியும் - இருவர்க்குந் துணையாவார் வலியையும், தூக்கிச் செயல் - சீர்தூக்கித் தன் வலிமிகுமாயின் அவ்வினையைச் செய்க. (இந் நால்வகை வலியுள் வினைவலி அரண் முற்றலும் கோடலும் முதலிய தொழிலானும், ஏனைய மூவகை ஆற்றலானும் கூறுபடுத்துத் தூக்கப்படும். 'தன்வலி மிகவின்கண் செய்க' என்ற விதியால்,தோற்றல் ஒருதலையாய குறைவின் கண்ணும், வேறல் ஐயமாய ஒப்பின் கண்ணும் ஒழிக என்பது பெற்றாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க.