குறள் 461:
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.
Expenditure, return, and profit of the deed In time to come; weigh these- than to the act proceed
அதிகாரம் - 47 - தெரிந்துசெயல்வகை
மு.வரதராசன் விளக்கம்
(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறகே ஒரு செயலில் இறங்க வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
அழிவதூஉம் - வினைசெய்யுங்கால் அப்பொழுது அதனால் அழிவதையும், ஆவதூஉம் - அழிந்தால் பின் ஆவதனையும், ஆகி வழி பயக்கும் ஊதியமும் - ஆய் நின்று பிற்பொழுது தரும் ஊதியத்தையும், சூழ்ந்து செயல் - சீர் தூக்கி உறுவதாயின் செய்க. (உறுவதாவது - நிகழ்வின்கண் அழிவதனில் ஆவது மிக்கு, எதிர்வினும் அது வளர்ந்து வருதல் . அழிவது இன்மையின், எதிர்வின்கண் வரும் ஆக்கத்தை 'ஊதியம்' என்றார். எனவே, அவ்வூதியம் பெறின் நிகழ்வின்கண் அழிவதும் ஆவதும் தம்முள் ஒத்தாலும், ஒழிதற்பாற்று அன்று என்பது பெற்றாம். இரண்டு காலத்தும் பயன் உடைமை தெரிந்து செய்க என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க.