மு.வரதராசன் விளக்கம்
ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது.
பரிமேலழகர் விளக்கம்
இல்வாழ்க்கை அறத்தாற்றின் ஆற்றின் - ஒருவன் இல் வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவன் ஆயின்; புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன் - அவன் அதற்குப் புறம் ஆகிய நெறியில் போய்ப் பெறும் பயன் யாது? ('அறத்தாறு' என்பது பழி அஞ்சிப் பகுத்து உண்டலும், அன்பு உடைமையும் என மேற்சொல்லிய ஆறு. 'புறத்தாறு' இல்லை விட்டு வனத்துச் செல்லும் நிலை. அந்நிலையின் இது பயனுடைத்து என்பார், போஒய்ப் பெறுவது எவன் என்றார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால் இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போய்ப் பெறும் பயன்தான் என்ன?