மு.வரதராசன் விளக்கம்
மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொறுத்து அமையும். அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும்
பரிமேலழகர் விளக்கம்
மாந்தர்க்கு உணர்ச்சி மனத்தான் ஆம் - மாந்தர்க்குப் பொது உணர்வு தம் மனம் காரணமாக உண்டாம் இன்னான் எனப்படும் சொல் இனத்தான் ஆம் - 'இவன் இத்தன்மையன்' என்று உலகத்தாரான் சொல்லப்படும் சொல் இனம் காரணமாக உண்டாம். (இயற்கையாய புலன் உணர்வு மாத்திரத்திற்கு இனம் வேண்டாமையின், அதனை மனத்தான் ஆம் என்றும், செயற்கையாய விசேட உணர்வுபற்றி நல்லன் என்றாகத் தீயன் என்றாக நிகழும் சொற்கு இனம் வேண்டுதலின், அதனை 'இனத்தான் ஆம்' என்றும் கூறினார். உவமையளவை கொள்ளாது 'அத் திரிபும்' மனத்தான் ஆம் என்பாரை நோக்கி, இதனான் அது மறுத்துக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனததால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும்.