மு.வரதராசன் விளக்கம்
தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்.
பரிமேலழகர் விளக்கம்
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் - அறிவு முதலியவற்றால் தம்மின் மிக்கார் தமக்குச் சிறந்தாராகத் தாம் அவர் வழிநின்று ஒழுகுதல், வன்மையுள் எல்லாம் தலை - அரசர்க்கு . எல்லா வலி உடைமையினும் தலை. (பொருள், படை, அரண்களான் ஆய வலியினும் இத்துணைவலி சிறந்தது என்றது. இவர் அவற்றான் நீக்கப்படாத தெய்வத்துன்பம் முதலியனவும் நீக்குதற்கு உரியர் ஆகலின்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும்.