மு.வரதராசன் விளக்கம்
அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அறிவில்லாதவர்கள்தாம் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள்.அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை - அஞ்சப்படுவதனை அஞ்சாமை பேதைமையாம், அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் - அவ்வஞ்சப்படுவதனை அஞ்சுதல் அறிவார் தொழிலாம். (பாவமும் பழியும் கேடும் முதலாக அஞ்சப்படுவன பலவாயினும், சாதி பற்றி, 'அஞ்சுவது' என்றார். அஞ்சாமை எண்ணாது செய்து நிற்றல். அஞ்சுதல்: எண்ணித் தவிர்தல். அது காரியமன்று என்று இகழப்படாது என்பார் 'அறிவார் தொழில்' என்றார். அஞ்சாமை இறை மாட்சியாகச் சொல்லப்பட்டமையின் ,ஈண்டு அஞ்ச வேண்டும் இடம் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதனைஉடையாரது இலக்கணம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல்.