குறள் 42:
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான்
என்பான் துணை.
To anchorites, to indigent, to those who've passed away, The man for household virtue famed is needful held and stay
அதிகாரம் - 5 - இல்வாழ்க்கை
மு.வரதராசன் விளக்கம்
துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
துறந்தார்க்கும்- களைகண் ஆனவரால் துறக்கப்பட்டார்க்கும்; துவ்வாதவர்க்கும் - நல்கூர்ந்தார்க்கும்; இறந்தார்க்கும்-ஒருவருமன்றித் தன்பால்வந்து இறந்தார்க்கும்; இல்வாழ்வான் என்பான் 'துணை'-இல்வாழ்வானென்று சொல்லப்படுவான் துணை (துறந்தார்க்குப் பாவம் ஒழிய அவர் களைகணாய் நின்று வேண்டுவன செய்தலானும், துவ்வாதவர்க்கு உணவு முதலிய கொடுத்தலானும், இறந்தார்க்கு நீர்க்கடன் முதலிய செய்து நல்லுலகின்கண் செலுத்தலானும், துணை என்றார். இவை இரண்டு பாட்டானும் இல்நிலை எல்லா உபகாரத்திற்கும் உரித்தாதல் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன்