குறள் 415:

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

Like staff in hand of him in slippery ground who strays Are words from mouth of those who walk in righteous ways
அதிகாரம் - 42 - கேள்வி
மு.வரதராசன் விளக்கம்
ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.
பரிமேலழகர் விளக்கம்
இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்று = வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்றுகோல் போல உதவும்; ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் - காவற்சாகாடு உகைப்பார்க்கு ஒழுக்கமுடையார் வாயிற் சொற்கள். (அவாய்நிலையான் வந்த உவமையடையால் பொருள் அடைவருவிக்கப்பட்டது. ஊற்றாகிய கோல் போல உதவுதல் -தளர்ந்துழி அதனை நீக்குதல். கல்வியுடையரேனும் ஒழுக்கம் இல்லாதார் அறிவிலராகலின், அவர் வாய்ச்சொல் கேட்கப்படாது என்பதுதோன்ற, 'ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்''வாய்'என்பது தீச்சொல்அறியாமையாகிய சிறப்புணர நின்றது. 'அவற்றைக் கேட்க' என்பதுகுறிப்பெச்சம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தில் உதவும்.