மு.வரதராசன் விளக்கம்
செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்.
பரிமேலழகர் விளக்கம்
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் - ஒருவருக்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வரும் செல்வம், அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை - அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றினும் தலையாகலான். ( செவியான் வரும் செல்வம் - கேள்வியால் எல்லாப் பொருளையும் அறிதல். பிற செல்வங்கள் - பொருளால் வருவன. அவை நிலையா ஆகலானும், துன்பவிளைவின ஆகலானும், இது தலையாயிற்று. அவற்றை ஒழித்து இதனையே செய்க என்பது குறிப்பெச்சம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
செவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.