குறள் 403:

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.

The blockheads, too, may men of worth appear, If they can keep from speaking where the learned hear
அதிகாரம் - 41 - கல்லாமை
மு.வரதராசன் விளக்கம்
கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
கற்றவர்களின், முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
கல்லாதவரும் நனி நல்லர் - கல்லாதவரும் மிக நல்லராவர், கற்றார் முன் சொல்லாது இருக்கப்பெறின் - தாமே தம்மையறிந்து கற்றார் அவையின்கண் ஒன்றனையும் சொல்லாதிருத்தல் கூடுமாயின். (உம்மை - இழிவுசிறப்பு உம்மை, தம்மைத்தாம் அறியாமையின் அது கூடாது என்பார், 'பெறின்' என்றும் கூடின் ஆண்டுத்தம்மை வெளிப்படுத்தாமையானும், பின் கல்வியை விரும்புவராகலானும் 'நனிநல்லர்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் கல்லாதார், அவைக்கண் சொல்லுதற்கு உரியரன்மை கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.