குறள் 40:

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

'Virtue' sums the things that should be done; 'Vice' sums the things that man should shun
அதிகாரம் - 4 - அறன்வலியுறுத்தல்
மு.வரதராசன் விளக்கம்
ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.
பரிமேலழகர் விளக்கம்
ஒருவற்குச் செயற்பாலது அறனே - ஒருவனுக்குச் செய்தற் பான்மையானது நல்வினையே; உயற்பாலது பழியே- ஒழிதற்பான்மையது தீவினையே. ( 'ஓரும்' என்பன இரண்டும் அசைநிலை. தேற்றேகாரம் பின்னும் கூட்டப்பட்டது. பழிக்கப்படுவதனைப் 'பழி' என்றார். இதனான் செய்வதும் ஒழிவதும் நியமிக்கப்பட்டன.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.