மு.வரதராசன் விளக்கம்
நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண்டு மகிழ்கிறவர்கள், தீமை விளையும்போது மட்டும் மனம் கலங்குவது ஏன்?
பரிமேலழகர் விளக்கம்
நன்று ஆங்கால் நல்லவாக் காண்பவர் - நல்வினை விளையுங்கால், அதன் விளைவாய இன்பங்களைத் துடைக்கும் திறன் நாடாது, இவை நல்ல என்று இயைந்து அனுபவிப்பார், அன்று ஆங்கால் அல்லற்படுவது எவன் - ஏனைத் தீவினை விளையுங்கால் அதன் விளைவாய துன்பங்களையும் அவ்வாறு அனுபவியாது, துடைக்கும் திறன் நாடி அல்லல் உழப்பது என் கருதி? (தாமே முன் செய்து கொண்டமையானும், ஊட்டாது கழியாமையானும், இரண்டும் இயைந்து அனுபவிக்கற்பால, அவற்றுள் ஒன்றிற்கு இயைந்து அனுபவித்து, ஏனையதற்கு அது செய்யாது வருந்துதல் அறிவன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் இன்பத்துன்பங்கட்குக் காரணமாய ஊழின் வலி கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நல்லது நடக்கும்போது மட்டும் நல்லது என அனுபவிப்பவர், தீயது நடக்கும்போது மட்டும் துன்பப்படுவது ஏன்?