மு.வரதராசன் விளக்கம்
உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.
பரிமேலழகர் விளக்கம்
உலகத்து இயற்கை இரு வேறு - உலகத்து ஊழினான் ஆய இயற்கை இரண்டு கூறு, திரு வேறு தெள்ளியராதலும் வேறு - ஆதலால் செல்வமுடையராதலும் வேறு, அறிவுடையராதலும் வேறு. (செல்வத்தினைப் படைத்தலும் காத்தலும் பயன்கோடலும் அறிவுடையார்க்கல்லது இயலாவன்றே? அவ்வாறன்றி, அறிவுடையார் வறியராகவும் ஏனையார் செல்வராகவும் காண்டலான், அறிவுடையராதற்கு ஆகும் ஊழ் செல்வமுடையராதற்கு ஆகாது, செல்வமுடையராதற்கு ஆகும் ஊழ் அறிவுடையராதற்கு ஆகாது என்றதாயிற்று. ஆகவே, செல்வம் செய்யுங்கால் அறிவாகிய துணைக்காரணமும் வேண்டா என்பது பெற்றாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும் வேறு வேறாம்.