மு.வரதராசன் விளக்கம்
ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்க வேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்ப நிலை, ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்.
பரிமேலழகர் விளக்கம்
வேண்டுங்கால் பிறவாமை வேண்டும் - பிறப்புத் துன்பம் ஆதல் அறிந்தவன் ஒன்றை வேண்டின் பிறவாமையை வேண்டும், அது வேண்டாமை வேண்ட வரும் - அப் பிறவாமைதான் ஒரு பொருளையும் அவாவாமையை வேண்ட அவனுக்குத் தானே உண்டாம். (அநாதியாகத் தான் பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களால் துன்பமுற்று வருகின்றமையை உணர்ந்தவனுக்கு ஆசை இன்பத்தின் கண்ணேயாகலின், பிறவாமையை வேண்டும் என்றும் ஈண்டைச் சிற்றின்பம் கருதி ஒருபொருளை அவாவின் அது பிறப்பீனும் வித்தாய்ப் பின்னும் முடிவில்லாத துன்பமே விளைத்தலின், அது வேணடாமை வேண்ட வரும் என்றும் கூறினார். பிறவாமையின் சிறப்புக் கூறி, பின் அதுவரும்வழி கூறத்தொடங்குகின்றமையின் 'மற்று' வினை மாற்றின்கண் வந்தது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.