மு.வரதராசன் விளக்கம்
விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
விருப்பு, வெறுப்பு, அறியாமை இவற்றுக்கு இடம் தராதவர்களை நெருங்குகிற துன்பம் அழிந்துவிடும்.
பரிமேலழகர் விளக்கம்
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெட - ஞான யோகங்களின் முதிர்ச்சியுடையார்க்கு விழைவு, வெறுப்பு, அவிச்சை என்னும் இக்குற்றங்கள் மூன்றனுடைய பெயருங்கூடக் கெடுதலான், நோய் கெடும் - அவற்றின் காரியமாய வினைப்பயன்கள் உளவாகா. (அநாதியாய அவிச்சையும் 'அதுபற்றி யான்' என மதிக்கும் அகங்காரமும், அதுபற்றி எனக்கு இது வேண்டும் என்னும் அவாவும், அதுபற்றி அப்பொருட்கண் செல்லும் ஆசையும், அதுபற்றி அதன் மறுதலைக்கண் செல்லும் கோபமும், என வடநூலார் குற்றம் ஐந்து என்றார். இவர் அவற்றுள் அகங்காரம் அவிச்சைக்கண்ணும் அவாவுதல் என்பது ஆசைக்கண்ணும் அடங்குதலான், 'மூன்று' என்றார். இடையறாத ஞானயோகங்களின் முன்னர் இக்குற்றங்கள் மூன்றும் காட்டுத்தீ முன்னர்ப் பஞ்சுத் துய்போலும் ஆகலின், அம் மிகுதிதோன்ற 'இவை மூன்றன் நாமங்கெட' என்றார். இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'கெட' என்பது எச்சத் திரிவு. 'நோய்' சாதியொருமை. காரணமாய அக்குற்றங்களைக் கொடுத்தார் காரியமாகிய வினைகளைச்செய்யாமையின், அவர்க்கு வரக்கடவ துன்பங்களும் இலவாதல் மெய்உணர்வின்பயன் ஆகலின், இவை இரண்டுபாட்டும்இவ்வதிகாரத்த வாயின. இவ்வாற்றானே மெய்யுணர்ந்தார்க்கு நிற்பன எடுத்த உடம்பும் அதுகொண்ட வினைப்பயன்களுமே என்பது பெற்றாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
விருப்பு, வெறுப்பு, மயக்கம் என்னும் இம்மூன்றன் பெயருங்கூட உள்ளத்திற்குள் இல்லாது போனால், அவற்றால் வரும் துன்பங்களும் இல்லாமல் போகும்.