மு.வரதராசன் விளக்கம்
பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும் போது,அதற்கு மேலும் வேறு தொடர்பு எதற்காக?
பரிமேலழகர் விளக்கம்
பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை - பிறப்பறுத்தலை மேற்கொண்டார்க்கு அதற்குக் கருவி ஆகிய உடம்பும்மிகை ஆம், மற்றும் தொடர்ப்பாடு எவன் - ஆனபின் அதற்கு மேலே இயைபு இல்லனவும் சில தொடர்ப்பாடு உளவாதல் என்னாம்? ('உடம்பு' என்ற பொதுமையான் உருவுடம்பும் அருவுடம்பும் கொள்ளப்படும். அவற்றுள் அருவுடம்பாவது பத்து வகை இந்திரிய உணர்வோடும் ஐவகை வாயுக்களோடும் காமவினை விளைவுகளோடும் கூடிய மனம், இது நுண்ணுடம்பு எனவும் படும். இதன்கண் பற்று நிலையாமையுணர்ந்த துணையான் விடாமையின், விடுதற்கு உபாயம் முன்னர்க் கூறுப. இவ்வுடம்புகளால் துன்பம் இடையறாது வருதலை உணர்ந்து இவற்றான் ஆய கட்டினை இறைப்பொழுதும் பொறாது வீட்டின்கண்ணே விரைதலின், 'உடம்பும் மிகை' என்றார். இன்பத்துன்பங்களான் உயிரோடு ஒற்றுமை யெய்துதலின், இவ்வுடம்புகளும் 'யான்' எனப்படும். இதனான், அகப்பற்று விடுதல் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பையே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு?