மு.வரதராசன் விளக்கம்
ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப் புலன்கள் விரும்புகின்றவற்றையெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்.
பரிமேலழகர் விளக்கம்
ஐந்தன் புலத்தை அடல் வேண்டும் - வீடு எய்துவார்க்குச் செவி முதலிய ஐம்பொறிகட்கு உரியவாய ஓசை முதலிய ஐம்புலன்களையும் கெடுத்தல் வேண்டும், வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும் ; - கெடுக்குங்கால் அவற்றை நுகர்தற்பொருட்டுத் தாம் படைத்த பொருள் முழுவதையும் ஒருங்கே விடுதல் வேண்டும். (புலம் என்றது, அவற்றை நுகர்தலை. அது மனத்தைத் துன்பத்தானும் பாவத்தானும் அன்றி வாராத பொருள்கள் மேலல்லது வீட்டு நெறியாகிய யோகஞானங்களில் செலுத்தாமையின், அதனை 'அடல் வேண்டும்' என்றும், அஃது அப்பொருள்கள் மேல் செல்லின் அந்நுகர்ச்சி விறகுபெற்ற தழல்போல் முறுகுவதல்லது அடப்படாமையின், 'வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும்' என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு விட வேண்டு்ம்.