மு.வரதராசன் விளக்கம்
நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்.
பரிமேலழகர் விளக்கம்
செயிர் உடம்பின் செல்லாத் தீ வாழ்க்கையவர் - நோக்கலாகா நோய் உடம்புடனே வறுமை கூர்ந்த இழிதொழில் வாழ்க்கையினை உடையாரை, உயிர் உடம்பின் நீக்கியார் என்ப - இவர் முற்பிறப்பின் கண் உயிர்களை அவை நின்ற உடம்பினின்றும் நீக்கினவர் என்று சொல்லுவர் வினை விளைவுகளை அறிந்தோர். (செல்லா வாழ்க்கை தீ வாழ்க்கை எனக் கூட்டுக. செயிர் உடம்பினராதல், அக்கே போல் அங்கை யொழிய விரல் அழுகித் - துக்கத் தொழுநோய் எழுபவே (நாலடி 123) என்பதனாலும் அறிக. மறுமைக் கண் இவையும் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கொல்வார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது. அருள் உடைமை முதல் கொல்லாமை ஈறாகச் சொல்லப்பட்ட இவற்றுள்ளே சொல்லப்படாத விரதங்களும் அடங்கும்; அஃது அறிந்து அடக்கிக்கொள்க. ஈண்டு உரைப்பின் பெருகும்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர்.