மு.வரதராசன் விளக்கம்
சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குக் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்.
பரிமேலழகர் விளக்கம்
சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் - யோகமாகிய சிறப்புத்தரும் அணிமா முதலிய செல்வங்களைப் பிறர்க்கு இன்னா செய்து பெறலாமாயினும்; பிறர்க்கு இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - அதனைச் செய்யாமை ஆகமங்கள் கூறிய ஆற்றான் மனந்தூயாராது துணிவு. (உம்மை பெறாமைமேற்று. சிறப்பு உடையதனைச் சிறப்பு என்றும், அதன் பயிற்சியான் வாயுவை வென்று எய்தப்படுதலின் எட்டுச் சித்திகளையும் சிறப்பு ஈனும் செல்வம் என்றும், காமம் வெகுளி மயக்கம் என்னும் குற்றங்கள் அற்றமையான் 'மாசு அற்றார்' என்றும் கூறினார். இதனான் தமக்கொரு பயன் நோக்கிச் செய்தல் விலக்கப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.