மு.வரதராசன் விளக்கம்
யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்.
பரிமேலழகர் விளக்கம்
யாம் மெய்யாக் கண்டவற்றுள் - யாம் மெய்ந்நூல்களாகக் கண்ட நூல்களுள், எனைத்து ஒன்றும் வாய்மையின் நல்ல பிற இல்லை - யாதொரு தன்மையாலும் வாய்மையின் மிக்கனவாகச் சொல்லப்பட்ட பிற அறங்கள் இல்லை. (மெய் உணர்த்துவனவற்றை 'மெய்' என்றார். அவையாவன: தம்கண் மயக்கம் இன்மையின் பொருள்களை உள்ளவாறு உணரவல்லராய்க் காம வெகுளிகள் இன்மையின் அவற்றை உணர்ந்தவாறே உரைக்கவும் வல்லராய இறைவர், அருளான் உலகத்தார் உறுதி எய்துதற் பொருட்டுக் கூறிய ஆகமங்கள். அவையெல்லாவற்றினும் இஃது ஒப்ப முடிந்தது என்பதாம். இவை மூன்று பாட்டானும் இவ்வறத்தினது தலைமை கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
சிறந்தவை என்று நான் கண்டு அறிந்த நூல்களுள் சொல்லப்பட்டவற்றுள், உண்மையைவிட, நல்லதாகச் சொல்லப்பட்ட அறம் வேறு ஒன்றும் இல்லை.