குறள் 295:

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.

Greater is he who speaks the truth with full consenting mind Than men whose lives have penitence and charity combined
அதிகாரம் - 30 - வாய்மை
மு.வரதராசன் விளக்கம்
ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும்,தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
மனத்தொடு வாய்மை மொழியின் - ஒருவன் தன்மனத்தொடு பொருந்த வாய்மையைச் சொல்வானாயின், தவத்தொடு தானம் செய்வாரின் தலை - அவன் தவமும் தானமும் ஒருங்கு செய்வாரினும் சிறப்புடையன். (மனத்தொடு பொருந்துதல் - மனத்திற்கு ஏறுதல். புறமாகிய மெய்யால் செய்யும் அவற்றினும் அகமாகிய மனம் மொழிகளால் செய்யும் அது பயனுடைத்து என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.