மு.வரதராசன் விளக்கம்
பற்றுக்களைத் துறந்தோம் என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பம் பலவும் தரும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
எத்தகைய செயல் புரிந்துவிட்டோம் என்று தமக்குத் தாமே வருந்த வேண்டிய துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி, உலகை ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும்.
பரிமேலழகர் விளக்கம்
பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் - தம்மைப் பிறர் நன்கு மதித்தற்பொருட்டு யாம் பற்று அற்றேம் என்று சொல்வாரது மறைந்த ஒழுக்கம், எற்று எற்று என்று ஏதம் பலவும் தரும் - அப்பொழுது இனிதுபோலத் தோன்றும் ஆயினும், பின் என் செய்தோம் என்று தாமே இரங்கும்வகை, அவர்க்குப் பல துன்பங்களையும் கொடுக்கும். (சொல் அளவல்லது பற்று அறாமையின் 'பற்று அற்றேம் என்பார்' என்றும், சிறிதாய்க் கணத்துள்ளே அழிவதாய் இன்பத்தின் பொருட்டுப் பெரிதாய் நெடுங்காலம் நிற்பதாய பாவத்தைச் செய்தார், அதன் விளைவின் கண் 'அந்தோ வினையே என்றழுவர்' (சீவக.முத்தி,27) ஆகலின் 'எற்று எற்று' என்னும் கூறினார். இவை ஐந்து பாட்டானும் கூடா ஒழுக்கத்தின் இழுக்கம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
எத்தகைய பற்றுகளும் இல்லாதவர் என்று வாயால் சொல்லிச் செயலால் தவறாக வாழ்பவரின் வாழ்க்கை, பிறகு ஏன் அப்படிச் செய்தோம் ஏன் அப்படிச் செய்தோம் என்று வருந்தும்படி பல துன்பங்களையும் தரும்.