மு.வரதராசன் விளக்கம்
புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.
பரிமேலழகர் விளக்கம்
நத்தம் (ஆகும்) கேடும் - புகழுடம்பிற்கு ஆக்கமாகுங் கேடும், உளது ஆகும் சாக்காடும் - புகழுடம்பு உளதாகும் சாக்காடும், வித்தகர்க்கு அல்லால் அரிது - சதுரப்பாடுடையார்க்கு அல்லது இல்லை. ('நந்து' என்னும் தொழிற்பெயர் விகாரத்துடன் 'நத்து' என்றாய் பின் 'அம்' என்னும் பகுதிப் பொருள் விகுதிபெற்று 'நத்தம்' என்று ஆயிற்று. 'போல்' என்பது ஈண்டு உரையசை. 'ஆகும்' என்பதனை முன்னும் கூட்டி, 'அரிது' என்பதனைத் தனித்தனி கூட்டி உரைக்க. ஆக்கமாகும் கேடாவது; புகழ் உடம்பு செல்வம் எய்தப் பூதஉடம்பு நல்கூர்தல். உளதாகும் சாக்காடாவது; புகழ் உடம்பு நிற்கப் பூத உடம்பு இறத்தல். நிலையாதனவற்றான் நிலையின் எய்துவார் வித்தகர் ஆகலின், 'வித்தகர்க்கு அல்லால்' அரிது என்றார். இவை இரண்டு பாட்டானும் புகழ் உடையார் எய்தும் மேன்மை கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பூத உடம்பின் வறுமையைப் புகழுடம்பின் செல்வமாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின் அழியாத் தன்மை ஆக்குவதும், பிறர்க்கு ஈந்து, தாம் மெய் உணர்ந்து, அவா அறுத்த வித்தகர்க்கு ஆகுமே அன்றி மற்றவர்க்கு ஆவது கடினம்.