அறத்துப்பால் · குறள் 212 / 1330
22. ஒப்புரவறிதல்

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டு.

All the wealth one earns is for rendering help to the deserving.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

தக்கார்க்கு - தகுதி உடையார்க்கு ஆயின், தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் - முயல்தலைச் செய்து ஈட்டிய பொருள் முழுவதும், வேளாண்மை செய்தற் பொருட்டு - ஒப்புரவு செய்தற் பயத்தவாம். (பிறர்க்கு உதவாதார் போலத் தாமே உண்டற்பொருட்டும் வைத்து இழத்தற்பொருட்டும் அன்று என்பதாயிற்று.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.

— சாலமன் பாப்பையா