அறத்துப்பால் · குறள் 185 / 1330
19. புறங்கூறாமை

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்புன்மையாற் காணப் படும்.

The tongue of the base slanderer that talks of virtue belies his heart.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக் கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை - புறம் சொல்லுவான் ஒருவன் அறனை நன்றென்று சொல்லினும் அது தன் மனத்தானாச் சொல்லுகின்றானல்லன் என்பது; புறம் சொல்லும் புன்மையால் காணப்படும் - அவன் புறஞ் சொல்லுதற்குச் காரணமான மனப்புன்மையானே அறியப்படும். (மனம் தீதாகலின், அச்சொல் கொள்ளப்படாது என்பதாம்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

அறத்தைப் பெரிதாகப் பேசும் ஒருவன் மனத்தால் அறவோன் அல்லன் என்பதை அவன் புறம்பேசும் இழிவினைக் கொண்டு கண்டுகொள்ளலாம்.

— சாலமன் பாப்பையா