அறத்துப்பால் · குறள் 181 / 1330
19. புறங்கூறாமை

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்புறங்கூறான் என்றல் இனிது.

One may be guilty of wrongful deeds, but let not one be guilty of slander.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

ஒருவன் அறம் கூறான் அல்ல செயினும் - ஒருவன் அறன் என்று சொல்லுவதும் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்;புறம் கூறான் என்றல் இனிது - பிறனைப் புறம் கூறான் என்று உலகத்தாரால் சொல்லப்படுதல் நன்று, (புறம் கூறாமை அக்குற்றங்களான் இழிக்கப்படாது, மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இதனால் அவ்வறத்தினது நன்மை கூறப்பட்டது.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது

— சாலமன் பாப்பையா