மு.வரதராசன் விளக்கம்
நினைத்தேன் என்று கூறினேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
உன்னை நினைத்தேன் என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்.அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க முடியும்?எனக்கேட்டு ஏன் மறந்தீர்? என்று அவள் ஊடல் கொண்டாள்.
பரிமேலழகர் விளக்கம்
இதுவும் அது.) உள்ளினேன் என்றேன் - பிரிந்த காலத்து நின்னையிடையின்றி நினைந்தேன் என்னும் கருத்தால், யான் உள்ளினேன் என்றேன்; மற்று என் மறந்தீர் என்று என்னைப் புல்லாள் புலத்தக்கனள் - என, அதனை ஒருகால் மறந்து பின் நினைந்தேன் என்றதாகக் கருதி, என்னை யிடையே மறந்தீர் என்று சொல்லி, முன் புல்லுதற்கு அமைந்தவள் அஃதொழிந்து புலத்தற்கு அமைந்தாள்.(மற்று - வினை மாற்றின்கண் வந்தது. அருத்தாபத்திவகையான் மறத்தலையுட்கொண்டு புலந்தாள் என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
எப்போதும் உன்னைத்தான் எண்ணினேன் என்றேன். சில சமயம் மறந்து ஒரு சமயம் நினைத்ததாக எண்ணி அப்படியானால் என்னை இடையில் மறந்திருக்கிறீர் என்று சொல்லித் தழுவத் தொடங்கியவள், விட்டுவிட்டு ஊடத் தொடங்கினாள்.