குறள் 1313:
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.
I wreathed with flowers one day my brow, The angry tempest lowers; She cries, 'Pray, for what woman now Do you put on your flowers?'
அதிகாரம் - 132 - புலவி நுணுக்கம்
மு.வரதராசன் விளக்கம்
கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
கிளையில் மலர்ந்த பூக்களைக் கட்டி நான் அணிந்து கொண்டிருந்தாலும், வேறொருத்திக்குக் காட்டுவதற்காகவே அணிந்திருக்கிறீர் எனக்கூறி சினம் கொள்வாள்.
பரிமேலழகர் விளக்கம்
(தலைமகள் புலவிக் குறிப்பினைக் கண்டு, நீவிர் கூடியொழுகா நிற்கவும் இது நிகழ்தற்குக் காரணம் யாது? என்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது.) கோட்டுப்பூச் சூடினும் - யான் கோடுதலைச்செய்யும் மாலையைச் சூடினேனாயினும்; ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று காயும் - நும்மாற்காதலிக்கப்பட்டாள் ஒருத்திக்கு இப்பூவணி காட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளாநிற்கும்; இத்தன்மையாட்கு ஒரு காரணம் வேண்டுமோ? ('கோடு' என்பது முதனிலைத் தொழிற்பெயர். பூ - ஆகுபெயர், வளையமாகச் சூடினும் என்பதாம்;'கோட்டம் கண்ணியும் கொடுந்திரையாடையும்' (புறநா.275)என்றார் பிறரும். இனி, 'அம்மருதநிலத்துப் பூவன்றி வேற்றுநிலத்துக் கோட்டுப்பூவைச் சூடினேனாயினும், ஈண்டையாள், பிறளொருத்திக்கு அவ்வேற்றுப் பூவணிகாட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளும்', எனினும்அமையும்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒரு மாற்றம் கருதி, ஒருமுறை, மரத்திலே மலர்ந்த பூவை மாலையாக்கிச் சூடினேன். அதற்கு அவள், நீர் விரும்பும் எவளுக்கோ அடையாளம் காட்டிச் சூடினீர் என்று சினந்து நின்றாள்.