குறள் 1296:

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.

My heart consumes me when I ponder lone, And all my lover's cruelty bemoan
அதிகாரம் - 130 - நெஞ்சொடுபுலத்தல்
மு.வரதராசன் விளக்கம்
காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்த போது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) என் நெஞ்சு இருந்தது - என் நெஞ்சு ஈண்டு இருந்தது; தனியே இருந்து நினைத்தக்கால் - காதலரைப் பிரிந்திருந்து அவர் கொடுமைகளை யான் தன்னொடு நினைத்தக்கால்; என்னைத் தினிய - அவ் அளவறிந்து என்னைத்தின்பது போன்று துன்பம் செய்தற்கே. ('என்மாட்டிருந்தது அன்று அவர் கொடுமைகளை உட்கொண்டு எனக்கு ஆற்றாமை செய்தற்கே, இன்று அவை நோக்கி அவரொடு புலத்தற்கன்று' என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.