மு.வரதராசன் விளக்கம்
நெஞ்சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்?
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில் நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) நெஞ்சே - நெஞ்சே; துனி செய்து மற்றுத் துவ்வாய் - நீ அவரைக் கண்ட பொழுதே இன்பம் நுகரக் கருதுவதல்லது அவர் தவறு நோக்கி, முன் புலவியை உண்டாக்கி அதனை அளவறிந்து பின் நுகரக் கருதாய்; இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் - ஆகலான், இனி அப்பெற்றிப்பட்டவற்றை நின்னொடு எண்ணுவார் யார்? யான் அது செய்யேன். (அப்பெற்றிப்பட்டன - புலக்கும் திறங்கள். 'காண' என்பது உரையசை. 'மற்று' வினை மாற்றின்கண் வந்தது. முன்னெல்லாம் புலப்பதாக எண்ணியிருந்து, பின் புணர்ச்சி விதும்பலின், இவ்வாறு கூறினாள்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நெஞ்சே! நீ அவரைப் பார்க்கும்போது இன்பம் நுகர எண்ணுகிறாயே தவிர, அவர் தவறுகளை எண்ணி ஊடி, பிறகு உறவு கொள்ள எண்ணமாட்டாய். ஆதலால் இனி இது போன்றவற்றை உன்னோடு யார் ஆலோசனை செய்வார்? நான் செய்யமாட்டேன்.