மு.வரதராசன் விளக்கம்
நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்?
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும் போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?
பரிமேலழகர் விளக்கம்
(தலைமகன்கண் தவறுண்டாய வழியும் புலவி கருதாத நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது.) நெஞ்சு - நெஞ்சே; அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் - அவருடைய நெஞ்சு நம்மை நினையாது அவர்க்காய் நிற்றல் கண்டு வைத்தும்; நீ எமக்கு ஆகாதது எவன் - நீ எமக்காய் நில்லாது, அவரை நினைத்தற் காரணம் யாது? (அவர்க்கு ஆதல் - அவர் கருதியதற்கு உடம்படுதல். எமக்காகாதது என்றது, புலவிக்கு உடம்பாடாமையை. 'ஒரு கருமத்தைத் தாமாக அறிந்து செய்யமாட்டாதார் செய்வாரைக் கண்டாயினும் செய்வர். நீ அதுவும் செய்கின்றிலை' என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை எண்ணாது அவருக்கே துணையாய் நிற்பதை அறிந்தும், நீ எனக்குத் துணை ஆகாமல் அவரையே நினைக்கக் காரணம் என்ன?