மு.வரதராசன் விளக்கம்
தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஊடுவதற்காகச் சென்றாலும்கூட அதை நெஞ்சம் மறந்து விட்டுக் கூடுவதற்கு இணங்கி விடுவதே காதலின் சிறப்பு.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) தோழி - தோழி; ஊடற்கண் சென்றேன் - காதலரைக் காணாமுன் அவர் செய்த தவற்றைத் தன்னோடு நினைந்து யான் அவரோடு ஊடுதற்கண்ணே சென்றேன்; என் நெஞ்சு அது மறந்து கூடற்கண் சென்றது - கண்டபின் என் நெஞ்சு அதனை மறந்து கூடுதற்கண்ணே சென்றது. (சேறல் நிகழ்தல் நினைத்த நெஞ்சிற்கும் ஒத்தலின், 'அது மறந்து' என்றாள். அச்செலவாற் பயன்என் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. 'அவ்வெல்லையிலே நெஞ்சு அறைபோகலான், அது முடிந்ததில்லை' என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தோழி! காதலரைக் காண்டுபதற்கு முன், அவர் செய்த தவற்றை எண்ணி ஊட நினைத்தேன்; அவரைப் பார்த்த பிறகு, அதை மறந்து, அவருடன் கூடவே என் மனம் சென்றது.