மு.வரதராசன் விளக்கம்
என்னுடைய கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது அவரைத் தழுவுவேனோ? அவரோடு கூடுவேனோ?
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
கண்ணின் மணியாம் என் காதலர் வந்தவுடன், பிரிந்திருந்த துயரின் காரணமாக அவருடன் ஊடல் கொள்வேனோ? அல்லது கட்டித் தழுவிக் கொள்வேனோ? அல்லது ஊடுதல் கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனோ? ஒன்றுமே புரியவில்லையே எனக்கு; அந்த இன்பத்தை நினைக்கும்போது.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) கண் அன்ன கேளிர் வரின் - கண்போற்சிறந்த கேளிர் வருவராயின், புலப்பேன் கொல் - அவர் வரவு நீட்டித்தமை நோக்கி யான் புலக்கக்கடவேனோ; புல்லுவேன் கொல் - அன்றி என் ஆற்றாமை நோக்கிப் புல்லக்கடவேனோ; கலப்பேன்கொல் - அவ்விரண்டும் வேண்டுதலான் அவ்விரு செயல்களையும் விரவக்கடவேனோ? யாது செய்யக் கடவேன்? (புலவியும் புல்லலும் ஒரு பொழுதின்கண் விரவாமையின், 'கலப்பேன் கொல்' என்றாள். மூன்றனையுஞ் செய்தல் கருத்தாகலின், விதுப்பாயிற்று. இனிக் 'கலப்பேன்கொல்' என்பதற்கு 'ஒரு புதுமை செய்யாது பிரியாத நாட்போலக் கலந்தொழுகுவேனோ'? என்று உரைப்பாரும் உளர்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
கண்போல் சிறந்த என் துணைவர் வந்தால் அவர் நெடுநாள் பிரிந்திருந்ததற்காக ஊடுவேனா? அவர் பிரிவைத் தாங்க முடியாமல் அவரைத் தழுவுவேனா? அல்லது இரண்டு செயல்களையும் கலந்து செய்வேனா?