மு.வரதராசன் விளக்கம்
நம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
சேராமல் பிரிந்து சென்ற காதலரைச் சிந்தையில் வைத்திருப்பதால் மேலும் மேனியெழில் இழந்து மெலிந்து அழிய வேண்டியுள்ளது.
பரிமேலழகர் விளக்கம்
(அவரை மறந்து ஆற்றல் வேண்டும் என்பதுபடச் சொல்லியது.) துன்னாத துறந்தாரை நெஞ்சத்து உடையேமா - நம்மைக் கூடாவண்ணம் துறந்துபோயினாரை நாம் அகத்து உடையேமாக; இன்னும் கவின் இழத்தும் - முன் இழந்த புறக்கவினேயன்றி நின்ற அகக்கவினும் இழப்பேம். ('குன்றின், நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்' (குறுந்.கடவுள்வாழ்த்து) என்புழிப்போல் 'நெஞ்சு' என்பது ஈண்டும் அகப் பொருட்டாய் நின்றது. 'அவர் நம்மைத் துன்னாமல் துறந்தார் ஆகவும். நாம் அவரை மறத்தல் மாட்டேமாகவும், போன பொய்க்கவினே அன்றி நின்ற நிறையும் இழப்பேம்' என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நம்மைக் கலவாமல் பிரிந்து போனவரை நாம் நம் மனத்திற்குள்ளேயே கொண்டிருப்பதால் முன்பு இழந்த புற அழகை மட்டுமே அன்று இருக்கும் அக அழகையும் இழக்கப் போகிறோம்.