மு.வரதராசன் விளக்கம்
என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருந்தி அவர் வந்து அன்பு செய்ய வில்லையே என்று ஏங்கி பிரிந்தவரின் பின் செல்கின்றாய் பேதை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நம்மீது இரக்கமின்றிப் பிரிந்து விட்டாரேயென்று ஏங்கிடும் அதே வேளையில் பிரிந்தவர் பின்னாலேயே சென்று கொண்டிருக்கும் என் நெஞ்சம் ஓர் அறிவற்ற பேதை போன்றதாகும்.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது) என் நெஞ்சு - என் நெஞ்சே; அவர் பிரிந்து நல்கார் என்று - அவர் இவ்வாற்றாமையை அறியாமையின் நொந்து வந்து தலையளி செய்யாராயினார் என்று கருதி; பிரிந்தவர்பின் ஏங்கிச் செல்வாய் பேதை- அறிவித்தற் பொருட்டு நம்மைப் பிரிந்து போயவர்பின் ஏங்கிச் செல்லலுற்ற நீ யாதும் அறியாய் (ஆற்றாமை கண்டு வைத்தும் நல்காது போயினாரைக் காணா வழிச்சென்று அறிவித்த துணையானே நல்க வருவர் என்று கருதினமையின் 'பேதை' என்றாள்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
என் நெஞ்சே! நம் பிரிவுத் துன்பத்தை அவர் அறியார். அதனால் வருந்தி அவர் நம்மீது அன்பு காட்டாமல் இருக்கின்றார் என்று எண்ணி, நம் நிலையை அவர்க்குக் கூறுவதற்காக, அவர் பின்னே ஏங்கிச் செல்லும் நீ ஏதும் அறியாத பேதையே!