மு.வரதராசன் விளக்கம்
நெஞ்சே (என்னுடன்) இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே!
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பிரிவுத் துன்பம் தந்த காதலருக்கு நம்மிடம் இரக்கமில்லாத போது, நெஞ்சே! நீ மட்டும் இங்கிருந்து கொண்டு அவரை எண்ணிக் கலங்குவதால் என்ன பயன்?
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) நெஞ்சே இருந்து உள்ளிப் பரிதல் என் - நெஞ்சே! அவர்பால் செல்வதும் செய்யாது ஈண்டு இறந்து படுவதும் செய்யாதிருந்து அவர் வரவு நினைந்து நீ வருந்துகின்றது என்னை? பைதல் நோய் செய்தார் கண் பரிந்து உள்ளல் இல் - இப்பையுள் நோய் செய்தார் மாட்டு நமக்கு இரங்கிவரக் கருதுதல் உண்டாகாது ('நம்மாட்டு அருளுடையர் அன்மையின், தாமாக வாரார், நாம் சேறலே இனித்தகுவது' என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நெஞ்சே! அவர் இருக்கும் இடத்திற்கும் போகாமல், இங்கே இறந்தும் போகாமல், இங்கிருந்தபடியே அவர் வருவதை எண்ணி நீ வருந்துவது ஏன்? நமக்கு இந்தத் துன்ப நோயைத் தந்தவர்க்கு நம்மீது இரக்கப்படும் எண்ணம் இல்லை.