மு.வரதராசன் விளக்கம்
காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய க்ண்களில் பசலையும் துன்பம் அடைந்து விட்டது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பிரிவுத் துயரால் பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்து விட்டது.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்று - தண் வளி போழவந்த கண்ணின் பசப்புத் துன்பமுற்றது; ஒண்ணுதல் செய்தது கண்டு. தனக்கு அயலாய ஒண்ணுதல் விளைத்த பசப்பைக் கண்டு. ('அது கைகளை ஊக்க அவ்வளவில் பசந்தது, யான் கைகளையும் ஊக்கி மெய்களும் நீங்கிச் சிறுகாற்று ஊடறுக்கும் துணையும் பசந்திலன்', எனத் தன் வன்மையும் அதன் மென்மையும் கருதி வெள்கிற்று என்பதாம், ஆகவே, 'அவளுறுப்புக்கள் ஒன்றினொன்று முற்பட்டு நலன் அழியும் , யாம் கடிதிற் சேறும்' என்பது கருத்தாயிற்று.)
சாலமன் பாப்பையா விளக்கம்
குளிர்ந்த சிறுகாற்று இடையே நுழைந்ததைக் கண்டு நெற்றி, நிற வேறுபாடு அடைந்தது. அதன் மென்மையைப் பார்த்து வெட்கப்பட்ட கண்ணும் துன்பம் உற்றதே!