குறள் 122:
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
Guard thou as wealth the power of self-control; Than this no greater gain to living soul
அதிகாரம் - 13 - அடக்கமுடைமை
மு.வரதராசன் விளக்கம்
அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும்.அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை.
பரிமேலழகர் விளக்கம்
உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை - உயிர்கட்கு அடக்கத்தின் மிக்க செல்வம் இல்லை; அடக்கத்தைப் பொருளாகக் காக்க - ஆதலான் அவ்வடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காக்க. (உயிர் என்பது சாதியொருமை. அஃது ஈண்டு மக்கள் உயிர்மேல் நின்றது, அறிந்து அடங்கிப் பயன் கொள்வது அதுவே ஆகலின்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அடக்கத்தைச் செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை.