காமத்துப்பால் · குறள் 1205 / 1330
121. நினைந்தவர்புலம்பல்

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்எம்நெஞ்சத்து ஓவா வரல்.

He keeps me away from his heart; does he not feel ashamed of constantly stealing into my heart?

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ?

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

(இதுவும் அது.) தம் நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் - தம்முடைய நெஞ்சின்கண்ணே யாம் செல்லாமல் எம்மைக் காவல் கொண்ட காதலர்; எம் நெஞ்சத்து ஓவா வரல் நாணார்கொல் - தாம் எம்முடைய நெஞ்சின்கண் ஒழியாது வருதலை நாணார்கொல்லோ? (ஒருவரைத் தம்கண் வருதற்கு ஒருகாலும் உடம்படாது, தாம் அவர்கண் பலகாலுஞ்சேறல் நாணுடையார் செயலன்மையின், 'நாணார்கொல்' என்றாள்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

தம் நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ?

— சாலமன் பாப்பையா