மு.வரதராசன் விளக்கம்
விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப் போலவே, தலைவனுடைய தழுவுதலின் சோர்வைப் பார்த்துக் காத்திருக்கினறது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
விளக்கின் ஒளிகுறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப்போல,இறுகத் தழுவிய காதலன்பிடி, சற்றுத் தளரும்போது காதலியின் உடலில் பசலைநிறம் படர்ந்து விடுகிறது.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் - விளக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இருளே போல்; கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு - கொண்கன் முயக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இப்பசப்பு. ('பார்க்கும்' என்பன இலக்கணைச் சொல். 'முன் பிரியாதிருக்கவும் தனக்கு அவகாசம் பார்த்து வரும் பசப்பு, பிரிவு பெற்றால் என் செய்யாது'? என்பாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
விளக்கு மெலிவதைப் பார்த்து நெருங்கும் இருட்டைப் போல என்னவரின் தழுவல் நெகிழ்வதைப் பார்த்துக் காத்திருந்த பசலை வரும்.