மு.வரதராசன் விளக்கம்
காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கிடையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
இன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்து விட்டாலும் பிறகு தூங்குவதில்லை. இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பவை காதலர்களின் கண்களாகத் தானே இருக்க முடியும்.
பரிமேலழகர் விளக்கம்
('நீயும் ஆற்றி நின் கண்களும் துயில்வனவாதல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது.) வாராக்கால் துஞ்சா - காதலர் வாராத ஞான்று அவர் வரவு பார்த்துத் துயிலா; வரின் துஞ்சா - வந்த ஞான்று, அவர் பிரிவஞ்சித் துயிலா; ஆயிடைக்கண் ஆரஞர் உற்றன- ஆதலான் அவ்விருவழியும் என் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தினை உடைய ('ஆயிடை' எனச் சுட்டு நீண்டது. 'இனி அவற்றிற்குத் துயில் ஒரு ஞான்றும் இல்லை' என்பதாம்)
சாலமன் பாப்பையா விளக்கம்
அவர் வராதபோது வரவை எதிர்பார்த்துத் தூங்குவதில்லை. வந்தபோதோ, எப்போது பிரிவாரோ என்று அஞ்சி் தூங்குவதில்லை; இரண்டு வழியிலும் என் கண்களுக்குத் தூங்க முடியாத துன்பந்தான்.